என்ன விஜய் மறந்துட்டீங்களா?…. ‘சர்கார்’ விவகாரத்தை கையில் எடுத்த அதிமுக.. விஜய்க்கு ராஜன் செல்லப்பா கொடுத்த பகீர் வார்னிங்….!

By Nanthini on தை 26, 2026

Spread the love

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், விஜய்யின் பழைய திரைப்பட சர்ச்சையை முன்வைத்து அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அதிமுகவை ‘ஊழல் கட்சி’ என்று விஜய் விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக ‘சர்கார்’ திரைப்படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய விலையில்லா மடிக்கணினிகளை உடைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மக்கள் நலத்திட்டங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி அப்போது அதிமுகவினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். தற்போது அந்தச் சம்பவத்தை நினைவூட்டியுள்ள ராஜன் செல்லப்பா, சர்கார் படத்தின் போது மதுரையில் என்ன நடந்தது என்பதை விஜய் மறந்துவிடக் கூடாது என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   

புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள விஜய், தனது கொள்கைகளையும் தொலைநோக்குத் திட்டங்களையும் முன்வைக்காமல் மற்ற கட்சிகளை விமர்சிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா திமுகவைத் தொட்டுவிட்டால் இனி சும்மா இருக்க முடியாது என்றும், மதுரையில் அன்று அப்படத்தை ஓடவிடாமல் தடுத்த போராட்டங்களை விஜய் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

   

விஜய்யின் அரசியல் பிரவேசம் ஆரம்பத்திலிருந்தே திராவிடக் கட்சிகளுடனான மோதல் போக்கிலேயே நகர்ந்து வருகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக மற்றும் அதிமுக இடையிலான இந்த வார்த்தைப் போர் தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் விமர்சனங்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து கடுமையான எதிர்வினைகளை ஆற்றி வருவது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.