“அதிமுக – தவெக ரகசிய ஆப்பரேஷன்”…. மாஜிக்களை தூக்க போட்ட திட்டம் எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சீனியர்கள்…. அலறும் அரசியல் களம்….!

By Nanthini on கார்த்திகை 3, 2026

Spread the love

அதிமுகவிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து முக்கியப் பொறுப்புகளை வகித்து வரும் முன்னாள் சீனியர் தலைவர்கள் பலருக்கு தங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்ற ஆதங்கமும் அதிருப்தியும் எழுந்துள்ளது. அவர்களை நம்பி தவெகவிற்குச் சென்ற ஆதரவாளர்களும் இதே மனநிலையில்தான் இருந்து வருகின்றனர். எம்.சி.சம்பத், வெள்ளமண்டி நடராஜன், சிவபதி, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் இந்த அதிருப்தி நிலவுவது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

இது குறித்து கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்தபோது, “ஏதோ ஒரு பெரிய எதிர்பார்ப்பிலும், நடிகரின் இமேஜ் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்திலும்தான் அவர்கள் தவெகவிற்குச் சென்றனர். ஆனால் விஜய் போன்ற ஒரு நடிகரை நேரடியாகச் சந்திக்கக்கூட முடியாது என்ற எதார்த்தம் அங்க சென்ற பிறகே அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. எனவே, அதிருப்தியில் இருக்கும் அவர்களை மீண்டும் தாய்க்கழகத்திற்கே திரும்ப அழைப்பது சரியாக இருக்கும்” என்று மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

   

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் மகன் மிதுனிடம் தவெகவில் அதிருப்தியில் இருக்கும் மாஜி நிர்வாகிகளிடம் ரகசியமாகப் பேசி அவர்களின் மனநிலையை அறியுமாறு அறிவுறுத்தினார். தந்தையின் உத்தரவின்பேரில் மிதுன் சம்பந்தப்பட்ட முன்னாள் நிர்வாகிகளைத் தனித்தனியாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதில் சிலர், “தவெகவில் மரியாதை இல்லாதது உண்மைதான்; இன்னும் கொஞ்ச காலம் பார்த்துவிட்டு அதிமுகவிற்கு திரும்புவது பற்றி யோசிக்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.

   

அதேவேளையில் வேறு சிலரோ, “ஆதங்கம் இருப்பது உண்மைதான். ஆனால் தவெகவிலிருந்து விலக நேர்ந்தால் திமுகவிற்குச் செல்வோமே தவிர, மீண்டும் அதிமுகவிற்கு வரும் யோசனை இல்லை. திமுக தரப்பில் இருந்தும் எங்களை அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று மிதுனிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்களை மிதுன் எடப்பாடி பழனிசாமியிடம் விவரித்ததைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்களுடனான ஆலோசனைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

 

அதிமுக தற்போது பலவீனமாக இருப்பதாகக் கருதுவதாலேயே மாஜிக்கள் மீண்டும் வரத் தயங்குகிறார்கள் என்பதை உணர்ந்த மூத்த தலைவர்கள், கட்சி வலிமையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று எடப்பாடியிடம் வலியுறுத்தியுள்ளனர். இதற்காகத் தேவைப்பட்டால் பொதுக்குழுவில் விவாதிக்கலாம் என்றும், கட்சியை மேலும் வலுப்படுத்த சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அரவணைத்துச் செல்வது குறித்து யோசிக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.