தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது.
இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் விஜய் ஒரு மாஸ்டர் பிளான் உடன் செப்டம்பர் 13ஆம் தேதி தனது முதல் சுற்று பயணத்தை தமிழகத்தில் தொடங்குகிறார். குறிப்பாக வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிறு தான் அவரின் டார்கெட் என தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், விடுமுறை நாளில் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். இதனால் தனது தேர்தல் பரப்புரை பேச்சை மக்கள் அதிக அளவில் நேரலையில் பார்க்க முடியும். அதேபோல எளிதாக கூட்டத்தை சேர்க்க முடியும் என விஜய் கணக்கு போட்டு உள்ளதாக தெரிகிறது.
