தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாக கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சியில் தொடங்கியுள்ளார். இன்று காலை 10.30 மணிக்கு அவருக்கு திருச்சியில் பிரச்சாரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தொண்டர்களின் கூட்ட நெரிசலில் சிக்கியதால் அவருடைய பிரச்சார வாகனம் மெல்ல மெல்ல நகர்த்து தற்போது தான் மரக்கடை வீதியை வந்தடைந்துள்ளது.
அங்கு தனது பிரச்சாரத்தை விஜய் தொடங்கியுள்ளார். தொண்டர்களின் கூச்சலுக்கு நடுவே பேசி வரும் விஜய், போருக்கு முன்னர் குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்வதைப்போல 2026 தேர்தலுக்கான முதல் களமாக திருச்சியை தேர்வு செய்ததாக விஜய் கூறியுள்ளார். அரசியலில் பல்வேறு திருப்பங்களை திருச்சி நகரம் கொடுத்துள்ளதாக கூறிய அவர், அறிஞர் அண்ணா தேர்தலில் போட்டியிட விரும்பிய இடம், எம்ஜிஆர் மாநாடு நடத்திய இடம், பெரியார் வாழ்ந்த இடம் என எப்போதும் திருச்சிக்கு அரசியல் திருப்புமுனை வரலாறு இருப்பதாக கூறியுள்ளார்.
