தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் NDA கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்க்க அடுத்தடுத்து பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மறைமுகமாக விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏசி சண்முகம் வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு விஜய் வந்தால் பலமான கூட்டணியாக இருக்கும் எனவும் ஆட்சி மாற்றம் உறுதி என்றும் கூறியுள்ளார். இதனால் விஜய்யை அதிமுக கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருவது உறுதியாகியுள்ளது.
