2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு இடையே, தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவுடனான தனது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்ற வாக்குறுதியை முன்வைத்து காங்கிரஸை ஈர்க்க முயன்ற நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த உடன்பாடு விஜய்யின் அரசியல் வியூகத்திற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது விஜய்யின் தவெக கொள்கையோடு ஒத்துப்போனதால், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்தக் கோரிக்கையைத் திட்டவட்டமாக மறுத்த போதிலும், இறுதியில் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்து கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி, காங்கிரஸிற்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடர்வது அதிகாரப்பூர்வமாகியுள்ளது.
காங்கிரஸ் தன்பக்கம் வரும் என்று பெரிதும் நம்பியிருந்த விஜய்க்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேமுதிக, அமமுக போன்ற கட்சிகளும் தவெக கூட்டணிக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது முக்கியக் கட்சிகள் எதுவும் இணையாதது விஜய்யைத் தனித்து விடச் செய்துள்ளது. “நாம போட்ட குண்டு இப்போதான் வெடிக்க தொடங்கியிருக்கிறது” என்று நம்பிக்கையுடன் பேசிய விஜய், தற்போது கூட்டணிக் கணக்குகளில் சிக்கலில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
