சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆளுநர் அர்லேகர் முன்னிலையில், “சி. ஜோசப் விஜய் எனும் நான்” என்று அவர் உறுதிமொழி ஏற்றபோது அரங்கம் அதிரும் வகையில் தொண்டர்களின் முழக்கம் விண்ணைத் தொட்டது.
விஜய்யுடன் இணைந்து ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். அமைச்சரவை பட்டியலில் பல்வேறு சமூகப் பிரதிநிதித்துவங்கள் இடம் பெற்றிருந்தாலும், தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய் தனது முதல் உரையில், “உங்க விஜய்… பொய் வாக்குறுதி அளிக்க மாட்டேன், சொன்னதை நிச்சயம் செய்வேன்” என உருக்கமாகப் பேசியது பொதுமக்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
பதவியேற்பு விழாவின் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது விஜய்யின் அந்த எளிமையான செயல். அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அங்கிருந்த மேசையை ஊழியர்கள் அகற்ற முயன்றனர். இதைக் கண்ட முதலமைச்சர் விஜய், சற்றும் தயங்காமல் தானும் முன்வந்து அந்த மேசையைத் தூக்கி ஓரமாக வைக்க உதவினார். ஒரு மாநிலத்தின் மிக உயரிய பதவியில் அமர்ந்த பின்னரும், அதிகாரத் தோரணை இன்றி ஒரு சாதாரண மனிதராக அவர் செய்த இந்தச் செயல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
“முதலமைச்சராக இருந்தாலும் அவர் இன்னும் எளிய மனிதராகவே இருக்கிறார்” எனத் தமிழக வெற்றிக்கழகத்தினர் இந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். அரசு ஊழியர்களுடன் இணைந்து மேசையைத் தூக்கிய விஜய்யின் செயல், அவர் ஒரு ‘மக்களுக்கான முதல்வர்’ என்பதைப் பறைசாற்றுவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். அதிகாரத்தின் உச்சாணிக் கிளையில் இருந்தாலும் எளிமையைக் கைவிடாத விஜய்யின் இந்த அணுகுமுறை, அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
