“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

By Nanthini on கார்த்திகை 6, 2026

Spread the love

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி அரையாண்டு நிறைவடைந்துவிட்டது. திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் அளித்த மிகப்பெரிய நம்பிக்கையின் பேரில் தவெக ஆட்சி அமைத்திருந்தாலும், தற்போதைய நிர்வாகச் செயல்பாடுகளில் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை என்ற விமர்சனம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. மேலும், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலரும் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது புதிய அரசுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்துத் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். எதிர்க்கட்சிகள் வெறும் சமூக வலைதளங்களில் ட்வீட் போடுவதையும், ஊடகங்களில் கவனம் ஈர்ப்பதையும் மட்டுமே வாடிக்கையாகக் கொண்டு செயல்பட்டு வருவதாக அவர் காட்டமாகக் குறிப்பிட்டார். உதயநிதி போன்ற தலைவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தினமும் மூன்று ட்வீட்களைப் பதிவிட்டு அரசியலை நடத்துவதாகவும், இதுபோன்ற தேவையற்ற விமர்சனங்களுக்குப் பதில் அளித்துக் கொண்டு இருந்தால் அரசின் பணிகளில் கவனம் செலுத்த முடியாது என்றும் அவர் விமர்சித்தார்.

   

மேலும், முதலமைச்சர் விஜய்யின் அமைதி மற்றும் செயல்பாட்டுப் பாணி குறித்து விளக்கிய அமைச்சர், 50 ஆண்டுகாலமாக ஒரே குடும்பத்தின் பிடியில் இருந்த பழைய சிஸ்டத்தை மாற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல என்று சுட்டிக்காட்டினார். தவெக தலைவர் விஜய்யைப் பார்த்துத் தான் கற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், “அதிகமாகப் பேசாமல் செயலில் காட்டுவதே எங்கள் பாணி. முதலமைச்சர் அமைதியாக இருக்கிறார் என்றால், அவர் சும்மா இல்லை; அடுத்தகட்ட நடவடிக்கைக்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 50 ஆண்டுகளாகச் செய்ய முடியாத அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றங்களை தவெக அரசு செய்து காட்டும்” என உறுதியளித்தார்.

   

தொடர்ந்து பேசிய அவர், வில்லிவாக்கம் தொகுதியில் தன்னைத் தோற்கடிக்க ரூ.100 கோடி வரை செலவு செய்யப்பட்ட நிலையிலும், மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்து 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். அரசு நிர்வாகத்தில் உள்ள சிறிய ஓட்டைகள் மற்றும் சிஸ்டம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்னும் ஓராண்டுக்குள் முற்றிலும் சரி செய்யப்படும் என்று குறிப்பிட்ட ஆதவ் அர்ஜுனா, 40 கட்சிகளை ஒரே நேர்கோட்டில் தைரியமாக எதிர்த்து நின்று வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்க்கு அரசாங்கத்தின் குறைகளை எப்படி நிவர்த்தி செய்வது என்பது நன்றாகவே தெரியும் என்பதால் பொறுத்திருந்து பாருங்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.