லண்டனில் நடைபெற்று வரும் லீ மென்ஸ் கோப்பை கார் பந்தய நிகழ்வில், தமிழக முதல்வர் விஜய் பங்கேற்றுப் பந்தயத்தைப் பச்சைக்கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள அவர், சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு வருகை தந்தார். அப்போது, பந்தயத்தில் பங்கேற்ற பிரபல நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து அன்போடு கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் உடனிருந்த இந்தச் சந்திப்பு, இருவரது ரசிகர்களிடையேயும் பெரும் உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக அஜித்தின் பந்தயக் காரில் அமர்ந்து முதல்வர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அவர் பச்சைக்கொடியசைத்துத் தொடங்கி வைத்தது பார்மேஷன் லேப் (Formation Lap) என்றழைக்கப்படும் முறைசாரா சுற்றாகும். உண்மையான பந்தயம் தொடங்குவதற்கு முன், போட்டியாளர்கள் தங்களது கார்களின் செயல்பாட்டை உறுதி செய்யவும், டிராக்கைச் சுற்றிவந்து பந்தயத் தொடக்கப் புள்ளியை அடையவும் இந்தச் சுற்று பயன்படும். இதன்பின்னரே முறைப்படி விளக்குச் சிக்னல்கள் மூலம் முதன்மைப் பந்தயம் தொடங்கும் என்பதால், எந்தவொரு பிரபலம் கொடியசைத்தாலும் இதுவே வழக்கமான நடைமுறையாகும்.
பார்மேஷன் லேப் தொடங்கப்பட்டதும், ரேஸ் டிராக்கில் இருந்து பார்வையாளர்கள் பகுதிக்குத் திரும்புவதற்காகப் பாதுகாப்பான இடத்திற்கு முதல்வர் விஜய் திடீரென ஓடி வந்தார். மிக ஃபிட்டாக இருக்கும் அவர் டிராக்கிலேயே கெத்தாக ஓடி வந்த இந்த வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இவரைத் தொடர்ந்து, நடிகை த்ரிஷாவும் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டிற்கு வருகை தந்து அஜித்தின் பந்தய அணியை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பந்தய நிகழ்வு, விளையாட்டுத்துறை ஊக்குவிப்பு மட்டுமின்றி அஜித் – விஜய் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத திருவிழாவாக அமைந்தது. இத்தகைய முக்கியப் புள்ளிகளின் சந்திப்பும், டிராக்கில் விஜய்யின் சுறுசுறுப்பான ஓட்டமும் லீ மென்ஸ் கோப்பை பந்தயத்திற்குப் கூடுதல் கவனத்தையும் உற்சாகத்தையும் சேர்த்துள்ளது.
