“தேரை இழுத்து தெருவில் விட்ராதீங்க”…. ‘சைலண்ட்டா’ இருங்க…. ஆதவ் அர்ஜுனாவுக்கு விஜய் விடுத்த ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு…!

By Nanthini on பங்குனி 18, 2026

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள், தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய ஆதவ் அர்ஜுனா, “திமுக குடும்பத்தின் மிரட்டல் காரணமாகவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை; ஆனால் அந்த அழுத்தங்களை எதிர்கொள்ளும் துணிச்சல் விஜய்க்கு இருக்கிறது” என்று ஒப்பிட்டுப் பேசினார். இது ரஜினி ரசிகர்களிடையே மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். அதில், ஆதவ் அர்ஜுனாவின் அவதூறு பேச்சைக் கண்டித்த அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் ஊடகங்களுக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக, “காலம் பதில் சொல்லும்” என்ற பாணியில் அவர் வெளியிட்ட கருத்து, தவெக தரப்புக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்பட்டது.

   

ரஜினிகாந்தின் இந்த அதிரடி பதிலடியைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட்டதாகத் தெரிகிறது. ரஜினி போன்ற ஒரு பெரிய ஆளுமையை விமர்சிப்பது கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையற்ற பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதிய விஜய், ஆதவ் அர்ஜுனாவைத் தொடர்பு கொண்டு தனது கண்டனத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, இன்று ஆதவ் அர்ஜுனா நடத்தவிருந்த செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

தற்போதுள்ள அரசியல் சூழலில், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்து தேர்தலை நோக்கி நகர விஜய் விரும்புவதாகவும், அதனாலேயே ஆதவ் அர்ஜுனாவை ‘சைலண்ட்’ ஆக இருக்கும்படி அவர் அறிவுறுத்தியதாகவும் ஒன்இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்தின் அறிக்கை தந்த அழுத்தம் மற்றும் விஜய்யின் கண்டிப்பு காரணமாக, தற்காலிகமாக இந்த மோதல் போக்கு தணிந்துள்ள நிலையில், வரும் நாட்களில் தவெக தனது நிலைப்பாட்டை எவ்வாறு மாற்றிக்கொள்ளும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.