“தேமுதிக கூட்டணி, 15,000 வாக்குகள்”… திமுக, அதிமுகவிற்கு விஜய பிரபாகரன் போட்ட ‘ஓபன்’ கண்டிஷன்…!

By Nanthini on தை 25, 2026

Spread the love

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய முத்தூர் கிராமத்தில் நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், கட்சித் தொண்டர்களிடையே உற்சாக உரையாற்றினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு தமிழகத்தில் பெண் தலைவர்களே இல்லை என்றும், தேமுதிகவிற்கு எதிர்காலம் இல்லை என்றும் பரப்பப்பட்ட அவதூறுகளுக்கு அண்மையில் நடைபெற்ற மாநாடு தக்க பதிலடி கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜான்சி ராணி போல கட்சியை எழுச்சியுடன் வழிநடத்தி வருவதாகப் பெருமிதம் தெரிவித்த அவர், தமிழகத்தின் மூன்றாவது பெரிய சக்தியாக தேமுதிக உருவெடுத்துள்ளது என்றார்.

தற்போதைய அரசியல் சூழலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதாகவும், தேமுதிக எந்தக் கூட்டணியில் இணைகிறதோ அந்தக் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் விஜய பிரபாகரன் உறுதிபடத் தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுமார் 60 தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியைத் தழுவியதைச் சுட்டிக்காட்டிய அவர், தேமுதிகவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 10 முதல் 15 ஆயிரம் வாக்குகள் பலமாக இருப்பதை எடுத்துரைத்தார். சாதி, மதம் கடந்த இயக்கமாகத் தேமுதிக விளங்குவதே இந்த வாக்கு வங்கிக்குக் காரணம் என்று அவர் விளக்கினார்.

   

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய அவர், வரும் தேர்தலில் 170 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று திமுகவும் அதிமுகவும் நினைப்பதில் தவறில்லை, ஆனால் தேமுதிகவிற்கும் என சில கொள்கைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, 2011 தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தகுந்த இடங்களை ஒதுக்குவது பெரிய கட்சிகளின் கடமை என வலியுறுத்தினார். “கூட்டணியில் இடங்களைக் கேட்பது எங்களது உரிமை, கூடுதல் இடங்களைத் தருவது உங்களது கடமை; நாங்கள் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை, உங்களை முதலமைச்சராக்கவே கேட்கிறோம்” என்று கூட்டணி கட்சிகளுக்குத் தெளிவான செய்தியை அவர் இக்கூட்டத்தில் பதிவு செய்தார்.