தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை ஒரு திருமண விழாவில் சந்தித்த நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய், அங்கு அவருடன் சில முக்கிய அரசியல் ஆலோசனைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது. விஜய்யின் அரசியல் செயல்பாடுகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் தாக்கம் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசியல் களம் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பாஜகவை விமர்சிப்பதைத் தவிர்த்து, திமுகவை மட்டும் பிரதான எதிரியாகக் கொண்டு செயல்படுமாறு ஜெகன்மோகன் ரெட்டி விஜய்க்கு அறிவுரை வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சேலத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பாஜகவை விமர்சிக்காமல் தவிர்த்ததற்கும், திமுகவை மட்டும் கடுமையாகச் சாடியதற்கும் இந்த ஆலோசனையே பின்னணியாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஆலோசனைகளுக்கு இடையே, விஜய் ஒரு சுவாரஸ்யமான கோரிக்கையை ஜெகன்மோகன் ரெட்டியிடம் முன்வைத்துள்ளார். “ஜெகன் அண்ணா, தமிழக எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் ஆந்திர ரெட்டி சமூக மக்களை தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களிக்கச் சொல்லுங்கள்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தாராம். விஜய்யின் இந்தத் திடீர் ‘டிமாண்ட்’ கேட்டுப் புன்னகைத்த ஜெகன்மோகன் ரெட்டி, “நிச்சயமாகச் சொல்லிவிட்டால் போச்சு” என்று சிரித்தபடியே தலையசைத்து உறுதி அளித்ததாகத் தெரிகிறது.
தன்னுடைய அரசியல் குருவாகவும் ரோல் மாடலாகவும் ஜெகன்மோகன் ரெட்டியைப் பார்க்கும் விஜய், அவருடைய பாணியிலேயே ஆடை அணிவது முதல் நடைமுறை அரசியல் வரை பின்பற்றி வருகிறார். தற்போது ஆந்திர அரசியலில் செல்வாக்கு மிக்க ஒரு தலைவரிடம் தமிழகத் தேர்தலுக்காக ஆதரவு கோரியிருப்பது, விஜய்யின் அரசியல் நகர்வுகள் மாநில எல்லைகளைக் கடந்தும் திட்டமிடப்படுவதைக் காட்டுகிறது. இந்தச் சந்திப்பும் விஜய்யின் கோரிக்கையும் வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
