“துணை முதல்வர் ஆகும் செங்கோட்டையன்”… விஜய் வைத்திருக்கும் எதிர்பாரா கிஃப்ட்… கோட்டையை அதிரவைக்கும் தவெக-வின் அடுத்த மூவ்…!

By Nanthini on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நகர்ந்துள்ளன. 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. காங்கிரஸின் ஆதரவு உறுதியாகியுள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான அந்தச் சில இடங்களைப் பூர்த்தி செய்ய விஜய் தரப்பு நிதானத்துடனும் அதே சமயம் நம்பிக்கையுடனும் காய்களை நகர்த்தி வருகிறது. தற்போதே அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்பு, பதவியேற்பு விழா ஏற்பாடுகள் என கோட்டைக்குள் நுழைய தவெக தயாராகிவிட்டது.

இந்த அரசியல் மாற்றத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவது, அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த கே.ஏ. செங்கோட்டையனின் வருகைதான். கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு கொண்ட அவர், தவெகவின் வெற்றிக்கு முக்கியத் தூணாக விளங்கியதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அனுபவமும் இளமையும் கலந்த ஒரு நிர்வாகத்தை வழங்க விரும்பும் விஜய், செங்கோட்டையனுக்கு அமைச்சரவையில் மிக முக்கியப் பொறுப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, அவருக்கு ‘துணை முதல்வர்’ பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் தவெக வட்டாரங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

   

தேர்தல் பிரச்சாரத்தின் போதே “அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கத்தை விஜய் முன்னெடுத்திருந்தார். அதனைச் செயல்படுத்தும் விதமாகவே, அனுபவம் மிக்க மூத்த தலைவர்களுக்கும், ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் உரிய இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. செங்கோட்டையன் போன்ற மூத்த அரசியல்வாதியைத் துணை முதல்வராக அமர்த்துவது, நிர்வாகச் சிக்கல்களைக் கையாள்வதற்கும் ஆட்சியின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் விஜய்க்குப் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

இது தவிர, சத்யபாமா, வி.எஸ். பாபு, சபரிநாதன் உள்ளிட்ட தவெகவின் முக்கிய முகங்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. கொங்கு மண்டலம் முதல் தென் மாவட்டங்கள் வரை அனைத்துப் பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், விஜய்யின் ‘தளபதி’யாக செங்கோட்டையன் பொறுப்பேற்பாரா? என்பதுதான் தற்போது தமிழக அரசியலின் மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது.