தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் திமுகவுக்கு பெரிய சவாலாக விஜய் மாறி உள்ளார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இணைந்த பிறகு நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. செங்கோட்டையன் கட்சியில் இணைந்த கையோடு மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் ஈரோட்டில் பிரம்மாண்டமாக தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி முடித்தார்.
இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து ஜனநாயகன் விழாவில் சூசகமாக தனது நிலைப்பாட்டை விஜய் கூறியுள்ளார். எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்றும், 33 ஆண்டுகளாக மக்களுடன் இருப்பதால் அதுவும் ஒரு மிகப்பெரிய அணி தானே எனவும் குறிப்பிட்டார். இதில் சஸ்பென்ஸ் வைத்தால்தான் கிக் இருக்கும் என கூறிய விஜய், இதை கைத்தட்டலுக்காக பேசவில்லை மனதில் இருந்து மக்களுக்காக பேசுகின்றேன் என்று தெரிவித்துள்ளார். கூட்டணியை தான் அணி என்று கூறுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
