திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘முதல்வர் கோப்பைக்கான’ மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குச் சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் விக்னேஷ் பாராட்டினார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நிலக்கோட்டை, ஆத்தூர் மற்றும் வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டதாகவும், பல ஆண்டுகளாக அங்குள்ள முன்னாள் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொந்தத் தொகுதிகளை மட்டுமே கவனித்ததால், ஒட்டுமொத்த மாவட்ட வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டு இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாகக் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் உடனடியாகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படுவார்கள் என எச்சரித்தார். இது தொடர்பான புகார்களைப் பதிவு செய்யத் தனி வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலை புகார்கள் அதிகளவில் வரும் மாவட்டங்களில் பணியாற்றும் டாஸ்மாக் மேலாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும் எனக் கூறினார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் லஞ்சம் பெறும் நோக்கத்துடன் மட்டுமே அதிகளவில் ‘FL-2’ மதுபானக் கூடங்களுக்கு (பார்களுக்கு) அனுமதிகள் வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், தமிழக வெற்றி கழக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒரு FL-2 பாருக்குக் கூடப் புதிதாக அனுமதி வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். தற்போது இந்த பார்களில் கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாகத் தொடர் புகார்கள் வந்து கொண்டிருப்பதால், அடுத்த கட்டமாக FL-2 பா்களைத் தீவிரமாகக் கண்காணித்து முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருவதாகவும் உறுதி அளித்தார்.
தமிழக வெற்றி கழக ஆட்சியில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தட்டாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர் விக்னேஷ், திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளைப் போலத் தவறு செய்யும் கட்சி நிர்வாகிகளைத் த.வெ.க ஒருபோதும் காப்பாற்றாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
