தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இருப்பினும், முக்கிய அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் மற்றும் செல்வாக்குமிக்க முகங்களை தவெக-விற்கு இழுக்கும் முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை எனத் தெரிகிறது. இதனால் அக்கட்சியின் தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கூட்டணிகளும் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வரும் நிலையில், விஜய்யின் தவெக தற்போது வரை தனித்தே விடப்பட்டுள்ளது. பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் தவெக-வுடன் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை மற்ற கூட்டணிகளில் தஞ்சம் புகுந்துவிட்டன. இந்தச் சூழலில், குறைந்தபட்சம் பிற கட்சிகளில் இருக்கும் அதிருப்தி சீனியர்களையாவது கட்சியில் இணைக்க விஜய் உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்ட இந்த ‘அசைன்மென்ட்’ தோல்வியைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் அமைச்சர்களின் வாரிசுகள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டுமே கட்சியில் இணைந்து வருவதால் விஜய் வருத்தத்தில் உள்ளார். குறிப்பாக, மதுரையைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளர்களை இழுக்க நடந்த பேச்சுவார்த்தையின் போது, அதிமுகவின் செல்லூர் ராஜு குறுக்கிட்டு அவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டது தவெக தலைமைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தற்போதுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், குறிப்பிடத்தக்க அரசியல் ஆளுமைகள் யாரும் இணையாதது கட்சி நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டுள்ளதாகவும், தேர்தல் வியூகங்களை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
