லண்டனில் இருந்து திரும்பியதும் அதிரடி…. முதல்வர் விஜய்யின் ரெட் லிஸ்டில் உள்ள 3 அமைச்சர்கள்…. தவெக அமைச்சரவையில் நள்ளிரவு தூக்கல்…..!

By Nanthini on புரட்டாதி 5, 2026

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சி அமைந்த 50 மற்றும் 100 நாட்களில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கைகள் பெறப்பட்டன. இதில் 31 தவெக அமைச்சர்களில் சிலர் துறை ரீதியான செயல்பாடுகளிலும், மக்கள் பணியிலும் திருப்திகரமாகச் செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 100 நாள் அறிக்கையிலும் சிலரின் செயல்பாடுகள் மேலும் மோசமடைந்துள்ளதால் முதல்வர் விஜய் கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த அதிரடி நீக்கப் பட்டியலில் முதலிடத்தில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இருப்பதாகக் தெரிகிறது. அரசு அதிகாரிகளிடம் தகாத முறையில் பேசிய சர்ச்சை, சட்டசபை விவாதங்களில் தடுமாறியது, சமூக நலத்துறையின் மந்தமான செயல்பாடு மற்றும் விருதுநகர் மாவட்ட உட்கட்சிப் பூசல் என இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. புஸ்ஸி ஆனந்த் மூலம் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லாததால், இவரை அமைச்சரவையில் இருந்து கழற்றிவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

   

பட்டியலில் இரண்டாவதாக கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி இடம் பெற்றுள்ளார். இவரது துறையில் உறவினர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும், முதல்வர் அலுவலகத்திற்குத் தெரியாமல் டெல்லி பயணத்தின் போது சில தொழிலதிபர்களைச் சந்தித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல் வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் மூன்றாவதாக உள்ளார். சட்டசபையில் காட்டுப்பன்றிகள் தொடர்பான விவாதத்தின் போது இவர் அளித்த பதில் பெரும் சர்ச்சையான நிலையில், அதை எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியது விஜய்யை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

   

லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியதும் இந்த 3 அமைச்சர்கள் மீதும் நீக்க நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய அதிரடி முடிவுகள் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல கண்டிப்பான நிர்வாகி என்ற பிம்பத்தை உருவாக்க முடியும் என அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தரப்பு நம்புகிறது. இருப்பினும், இந்த நீக்கம் தொடர்பான இறுதி முடிவை விஜய் இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்காததால், லண்டன் பயணத்திற்குப் பிறகு இதில் ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.