தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் மிகுந்த பரபரப்பை எட்டியுள்ளது. திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் கருப்புப் பணம் வாங்குவது முற்றிலும் உண்மை என்று குறிப்பிட்ட அவர், இக்குற்றச்சாட்டைத் தான் உறுதியாகக் கூறுவதாகவும் தெரிவித்தார்.
விஜய் மீதான தனது புகார்களை அடுக்கிய திண்டுக்கல் சீனிவாசன், “விஜய் கருப்புப் பணம் வாங்குகிறார் என்பதை நான் எத்தனை முறை சொல்வது? நான் நேர்மையானவன், ஊழல்வாதி அல்ல, எனக்கு இவ்வளவுதான் சம்பளம் கிடைக்கிறது என்று அவரால் பகிரங்கமாக நிரூபிக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக விஜய் தரப்பிலிருந்து இதுவரை எவ்விதப் பதிலும் வராதது ஏன் என்றும் அவர் வினவினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனையும் இச்சம்பவத்தோடு ஒப்பிட்டுப் பேசிய அவர், செங்கோட்டையன் ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என்றும், அவரிடம் கருப்புப் பணம் குவிந்துள்ளதாகவும் சாடினார். நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் விஜய்யும், செங்கோட்டையனும் மௌனம் காப்பதாக அவர் தனது பேட்டியில் ஆவேசமாகத் தெரிவித்தார்.
திமுக அமைச்சர்கள் பலரது பெயர்களைப் பட்டியலிட்டு அவர்கள் மீதான ஊழல் வழக்குகளையும் சாடிய திண்டுக்கல் சீனிவாசன், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில், விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
