தமிழக அரசியலில் எப்போதுமே திருப்பங்களுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில், தற்போதைய அதிமுகவின் உட்கட்சி அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு எதிராகக் கையாண்ட அதே ‘தனி அணி’ வியூகத்தை, இப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கையாள சண்முகம் தரப்பு திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் கசிந்து வருகின்றன.
கடந்த 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் அதிமுக கூட்டணி மூலம் 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், சட்டமன்றத்தில் ஜெயலலிதாவையே எதிர்த்துப் பேசியதால் இருவருக்கும் இடையே கடும் மோதல் உருவானது. விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பறிக்க எண்ணிய ஜெயலலிதா, தேமுதிகவின் 11 எம்.எல்.ஏ.க்களைப் பிரித்தெடுத்து ‘தனி அணியாக’ இயங்க வைத்தார். அவர்கள் சட்டமன்றத்தில் விஜயகாந்திற்கு எதிராகவே குரல் கொடுத்ததுடன், தொகுதி கோரிக்கைகளுக்காக ஜெயலலிதாவைச் சந்தித்து மனு அளித்தனர். இறுதியாகக் கட்சியிலிருந்து நீக்கவும் முடியாமல், பதவியையும் தக்கவைக்க முடியாமல் விஜயகாந்த் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது.
இதே அதிரடி வியூகத்தைத்தான் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்க சி.வி.சண்முகம் தரப்பு கையில் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் நீண்டகாலமாக அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, சட்டமன்றத்திலும் வெளியிலும் எடப்பாடிக்கு எதிராக ஒரு தனி அணியாகச் செயல்பட வைப்பதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இந்த நகர்வு அதிமுகவின் அதிகார மையத்தை நிலைகுலையச் செய்யும் என்றும் கணிக்கப்படுகிறது.
இந்த யோசனையை வெறும் திட்டமாக மட்டும் வைத்திருக்காமல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கவனத்திற்குச் சண்முகம் தரப்பு கொண்டு சென்றுள்ளதாம். எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக முடக்குவதற்கும், அதிமுகவின் வாக்கு வங்கியைக் கணிசமாகக் குறைப்பதற்கும் இதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்து, இந்தத் தனி அணி திட்டத்திற்கு விஜய்யும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது. முதற்கட்ட ரகசிய ஆலோசனைகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்த அரசியல் நகர்வுகள் வெளிப்படையாக வெளிவந்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
