விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா யார் தெரியுமா… தமிழ் எழுத்துலகில் அவர் படைத்த சாதனை என்னன்னு தெரியுமா?

By vinoth on கார்த்திகை 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கும் விஜய் ஆண்டனி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா என்பதாகும். ஊடகம் மற்றும் திரைப்பட துறையில் நுழைந்தபோது தனது பெயரை அக்னி என்று மாற்றிக் கொண்டார் விஜய் ஆண்டனி.

பின்னர் அந்தப் பெயர் சரியாக எடுபடாததால் பின்னர் விஜய் ஆண்டனி என்ற பெயரை எஸ்ஏ சந்திரசேகர் இவருக்கு வைத்தார். முதலில் சன் தொலைக்காட்சியில் பல சீரியல்களில் இசையமைப்பாளராக பணியாற்றினார். அவர் இசையமைத்த ‘என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

   

   

அதன் பின்னர் சுக்ரன் என்ற படம் மூலமாக இசையமைப்பாளர் ஆக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் வரிசையாக ஹிட் பாடல்களாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் ஆனார். ஒரு கட்டத்தில் தான் பிஸியான இசையமைப்பாளராக இருக்கும்போதே ‘நான்’ படம் மூலமாக நடிகர் ஆனார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து ஹீரோவாக பயனித்து வருகிறார். தன்னுடைய படங்கள் தவிர்த்து பிற படங்களுக்கு அவர் இசையமைப்பது இல்லை.

 

சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீஸான படங்கள் எதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை. ஆனாலும் அவரின் சில படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இந்நிலையில் அவரின் கொள்ளுத் தாத்தா பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் கொள்ளுத் தாத்தாவான மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்பவர்தான் தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ எனும் நாவலை எழுதியவர்.

அவர் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ள  விஜய் ஆண்டனி “அவர் எழுதிய நாவலை நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் அவருடைய புகைப்படத்தை எனக்குக் காட்டியுள்ளார்கள். வீட்டில் அவர் புகைப்படம் உள்ளது. அவரை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.