“இனி வாழ்நாள் முழுவதும் காலணி அணிய மாட்டேன்”….. விஜய் ஆண்டனி எடுத்த உருக்கமான சபதம்…. மனைவி ஃபாத்திமா வெளியிட்ட உருக்கமான ரகசியம்….!

By Nanthini on கார்த்திகை 18, 2026

Spread the love

மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து, நாயகனாக நடித்துள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் பேபி லிதன்யா, பகவதி பெருமாள், அருவி மதன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிப்பு மற்றும் தயாரிப்போடு மட்டுமல்லாமல், இப்படத்திற்கு இசையமைத்து படத்தொகுப்புப் பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டுள்ளார். படத்தின் வெளியீட்டையொட்டி படக்குழுவினர் தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், விஜய் ஆண்டனி வழக்கம் போல் காலணி அணியாமல் கலந்து கொண்டார். சமீப காலமாகவே அவர் காலணி அணியாமல் வலம் வருவதற்கான உருக்கமான காரணத்தை அவரது மனைவியும் படத் தயாரிப்பாளருமான ஃபாத்திமா மேடையில் பகிர்ந்து கொண்டார். தங்களின் மறைந்த மூத்த மகள் மீரா கல்லூரி செல்வதற்காக லண்டன், அமெரிக்கா எனப் பல வெளிநாடுகளிலிருந்து வாங்கி வைத்திருந்த ஷூக்கள், அவளது மறைவுக்குப் பிறகும் அப்படியே இருப்பதைப் பார்த்த விஜய் ஆண்டனி, அன்றே இனி வாழ்நாள் முழுவதும் காலணி அணிவதில்லை என முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார்.

   

மேலும், இசை நிகழ்ச்சிகளில் மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் காலணி அணிவார் என்றும் ஃபாத்திமா குறிப்பிட்டார். அதேபோல், விஜய் ஆண்டனி தற்போது கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரமும் மீரா கடைசியாகப் பயன்படுத்தியதுதான் என்ற நெகிழ்ச்சியான தகவலையும் அவர் வெளிப்படுத்தினார். உடல்நலனைக் கருத்தில் கொண்டு இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் நவீன வாட்ச் அணியுமாறு தான் அறிவுறுத்திய போதும், “மீராவின் வாட்சிலேயே நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வேன், அவளே எனக்கு அனைத்தையும் காட்டிவிடுவாள்” என விஜய் ஆண்டனி கூறியதாக ஃபாத்திமா உருக்கத்துடன் தெரிவித்தார்.

   

கடந்த 2023-ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி – ஃபாத்திமா தம்பதியின் மகள் மீரா உயிரிழந்த துயரச் சம்பவம் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஃபாத்திமா, அங்கிருந்தவர்களைத் தனது குடும்பமாகக் கருதி இந்தத் தனிப்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறியது அரங்கில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.