தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பல முக்கிய நலத்திட்டங்களை அறிவித்தார். அதில் குறிப்பாக, தவெக ஆட்சிக்கு வந்தால் ‘மதிப்புமிகு மகளிர் திட்டத்தின்’ கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதுமட்டுமின்றி, இலவசப் பேருந்து பயணம், கேஸ் சிலிண்டர் மானியம், கல்வி உதவித்தொகை எனப் பெண்கள் நலன் சார்ந்த 12 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்புகள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் அதேவேளையில், சமூக வலைதளங்களில் ஒரு பழைய காணொளி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தவெக கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகி அருண் ராஜ் பேசுகையில், தற்போதைய ஆட்சியாளர்கள் வழங்கி வரும் 1,000 ரூபாய் போன்ற இலவசத் திட்டங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். “இலவசங்களைத் தவிர திமுக வேறு எதாவது உருப்படியான திட்டம் கொண்டுவந்துள்ளதா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அன்று இலவசத் திட்டங்களை விமர்சித்த அதே கட்சியைச் சேர்ந்த விஜய், தற்போது அதே போன்ற திட்டங்களை வாக்குறுதியாக அறிவித்திருப்பது முரண்பாடாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஒரே கட்சியில் உள்ள இருவேறு தலைவர்கள் ஒரே திட்டம் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பது, தவெக நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
இதனிடையே, விஜய் அறிவித்துள்ள திட்டங்கள் ஏற்கனவே அதிமுக மற்றும் திமுக அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மறுவடிவம் என்றும், சில திட்டங்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களைத் தழுவி இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எது எப்படியிருப்பினும், வரும் தேர்தலை முன்னிட்டு பெண்கள் வாக்குகளைக் குறிவைத்து விஜய் களமிறங்கியிருப்பது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
