வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவான பு குவோக் அருகே உள்ள ஹான் மே ரூட் ங்வோய் தீவிலிருந்து திரும்பிய சுற்றுலாப் படகு, திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழர்கள் உள்ளிட்ட 15 இந்தியப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்நோர்கெலிங், ஸ்கூபா டைவிங் போன்ற சாகசங்களுக்குப் பெயர்பெற்ற இப்பகுதிக்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில், சாகசப் பயணங்களை முடித்துவிட்டு அன் தோய் துறைமுகத்தை நோக்கித் திரும்பியபோதே இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
“ஓஷன் பியர் ஐலண்ட்” என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான அதிவேகப் (Speed) படகில் 32 இந்தியச் சுற்றுலாப் பயணிகளும், 4 ஊழியர்களும் பயணித்துள்ளனர். விபத்து நடந்த நாளன்று மழையோ, புயலோ போன்ற மோசமான வானிலை எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. வழக்கமான காலநிலை நிலவியபோதிலும், அன் தோய் கடல் பகுதியில் மட்டும் எதிர்பாராத விதமாக திடீரென வழக்கத்திற்கு மாறான அலைச் சீற்றமும், பலத்த காற்றும் ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்தை அடைவதற்குக் கரையில் இருந்து வெறும் 400 மீட்டர் தொலைவே இருந்த நிலையில், அலைகளின் வேகத்தைத் தாங்க முடியாமல் படகு நடுக்கடலில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே பிற சுற்றுலாப் படகுகளும், படகின் உரிமையாளரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருப்பினும், படகு தலைகீழாகக் கவிழ்ந்து அதன் அடிப்பகுதிக்குள் பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டதாலும், கடலின் சீற்றம் குறையாததாலும் மீட்புப் பணியில் பெரும் சவாலும் தாமதமும் ஏற்பட்டது.
இவ்விபத்து தொடர்பான தற்போதைய வீடியோ காட்சிகள் காண்போரை நிலைகுலைய வைத்துள்ளன. தண்ணீரில் இருந்து சுயநினைவின்றி மீட்கப்பட்ட பயணிகளுக்கு, உள்ளூர் மக்களும் பிற சுற்றுலாப் பயணிகளும் கரையோரம் வைத்து கதறியபடியே முதலுதவியாகச் செயற்கை சுவாசம் (CPR) அளிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, வியட்நாம் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் அன் தோய் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து செயல்பட்டு, படகில் இருந்த 36 பேரையும் மீட்டு இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்தனர்.
