பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் மெஹந்தி போடும் மெஷின் ஒன்றின் விடியோவைப் பகிர்ந்து, “இன்னும் சில வேலைகள் பறிபோயின” எனக் குறிப்பிட்டிருப்பது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த விடியோவில், ஒரு பெண் தனது கையை மெஷினுக்குள் வைக்க, அது துல்லியமாக மெஹந்தி டிசைனை வரைகிறது. திருமணங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் பாரம்பரியமாக மெஹந்தி வைக்கும் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை இந்தத் தானியங்கி தொழில்நுட்பம் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், இந்த விடியோவிற்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. “இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி விடியோ, உண்மையில் இப்படி ஒரு மெஷின் இல்லை” என்று சிலர் கூறி வருகின்றனர். மேலும் சிலர், “திருமண நாளில் எந்தப் பெண்ணும் ஊசி போன்ற இந்த மெஷினுக்குள் கையை வைக்கத் துணிய மாட்டார்கள்; மனிதர்களின் கைகளால் வரையப்படும் கலைநயத்தையும் தொடு உணர்வையும் மெஷின்களால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது” எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
