மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சவுத்ரி தனது சொந்த முயற்சியில் அஜ்னார் நதியிலிருந்த பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளைத் தனியாகச் சுத்தம் செய்து சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்றார். இவரது இந்த முயற்சியைப் பாராட்டும் விதமாக, நெதர்லாந்தைச் சேர்ந்த ‘தி ஓஷன் கிளீன்அப்’ அமைப்பின் சி.இ.ஓ போயன் ஸ்லாட், எக்ஸ் தளத்தின் வழியாக பிட்டு தபாகிக்குத் தங்கள் அமைப்பில் பணியாற்ற வேலை வாய்ப்பை வழங்கினார்.
தற்போது இந்த வேலை வாய்ப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிட்டு தபாகி, ‘தி ஓஷன் கிளீன்அப்’ அமைப்பின் பிரதிநிதிகளுடன் வீடியோ காலில் பேசும் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற அந்த வீடியோவில், அவர் அந்த அமைப்பினருடன் கலந்தாலோசிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அவர் அந்த நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக பணியில் சேர்ந்துவிட்டாரா அல்லது ஆஃபரை ஏற்றுக்கொண்டாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேவேளையில், தனது தூய்மைப் பணியை மத்தியப் பிரதேசத்துடன் நிறுத்திக்கொள்ள விரும்பாத பிட்டு தபாகி, இந்தியா முழுவதும் உள்ள பிற மாநிலங்களுக்கும் சென்று நதிகளைச் சுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் அடுத்ததாக எந்த மாநிலத்திற்கு வந்து நதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும்?” என்று தனது பின்பற்றுபவர்களிடம் கருத்து கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பீகார், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் நெட்டிசன்கள் தங்களது பகுதிக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
