பிரபல தமிழறிஞரும் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ் மொழித் துறைத் தலைவருமான முனைவர் வ.ஜெயதேவன் (79) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். தமிழ் அகராதியியல் துறையில் ஆழமான புலமை கொண்ட இவர், அது தொடர்பாக ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் படைத்துள்ளார். இவரது சீரிய தமிழ்ப் பணியைப் பாராட்டி, கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு மதிப்புமிக்க கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை வழங்கி கௌரவித்தது.
கல்வித் துறையில் சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்த இவர், மத்திய மற்றும் மாநில அரசுகள் அமைத்த பல்வேறு உயர்மட்டக் கல்விக் குழுக்களுக்குத் தலைவராகவும் இருந்து வழிகாட்டியுள்ளார். மறைந்த ஜெயதேவனின் இறுதிச் சடங்குகள் சென்னை பெருங்குடியில் இன்று நடைபெற்றன. இவரது மறைவு தமிழறிஞர்கள் மற்றும் கல்விப்புலத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
