தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த நடிகர் விஜய், 2024 ஆம் ஆண்டு ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சியைத் தொடங்கி அரசியல் களம் புகுந்தார். கட்சி ஆரம்பித்த வெறும் இரண்டே ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார். சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராகப் பதவியேற்று அரசியலிலும் தனது உச்சத்தைத் தொட்டுள்ளார்.
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது முதலே, திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், விஜய்யை வைத்து ‘கோட்’ (GOAT – The Greatest Of All Time) திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு, தற்போது முதலமைச்சராக இருக்கும் விஜய்யை நேரில் சந்தித்து தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது வெங்கட் பிரபு முதலமைச்சர் விஜய்க்கு வழங்கிய ஒரு சுவாரசியமான பரிசு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ‘கோட்’ திரைப்படத்தில் விஜய் பயன்படுத்திய காரின் பதிவு எண் TN 07 CM 2026 என்பதாகும். விஜய் 2026-ல் முதலமைச்சராவார் என்பதைக் கணிப்பது போல் அமைந்த அந்த ‘CM 2026’ என்ற கார் நம்பர் பிளேட்டையே வெங்கட் பிரபு அவருக்குப் பரிசாக அளித்துள்ளார். இந்த அரிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
