மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேச்சேரி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்துகொண்டிருந்த போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் நுழைய முயன்ற வித்யாராணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சாலையில் அமர்ந்து கண்ணீர் விட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரைப் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
முன்கூட்டியே அனுமதி பெற்ற தங்களது வாகனப் பேரணியை அன்புமணி பிரசாரத்திற்காகத் தடுத்தது அநீதி என்று வித்யாராணி குற்றம் சாட்டியுள்ளார். தன்னை மட்டும் குறிவைத்து அதிகாரிகள் சோதனை செய்வதாகவும், உரிய முறையில்தான் அனுமதி கேட்டதாகவும் அவர் ஆதங்கப்பட்டார். ஆனால், அவர் முறையான அனுமதி பெறாமல் அத்துமீறிச் சென்றதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வீரப்பன் மகளின் இந்த கைது நடவடிக்கை அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
