தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜயின் தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இதற்காக கடந்த ஆறு மாதங்களாக விஜய் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கட்சியில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர் சேர்க்கை, மாவட்ட வாரியாக வாக்குச்சாவடி குழு கூட்டம் அமைப்பது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஈடுபட்டு வருகின்றார். தொடர்ந்து பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் விஜய் சமீபத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார். இதுவரை இரண்டு கட்டமாக பிரச்சாரம் நடந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டமாக கரூரில் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் பரப்புரைக்காக விஜய் திருவள்ளூர் வந்தால் அவரின் உருவ பொம்மையை எரிப்பேன் என தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார். போதை பொருள் பயன்பாடு குறித்த சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கம் அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், மருத்துவ உதவி கேட்ட ரசிகைக்கு விஜய் உதவி செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார். எனவே விஜய்க்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக வீரலட்சுமி கூறியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
