ஆற்றில் ஒரு கால்… சேற்றில் ஒரு கால்…. திருமாவளவனின் டபுள் ஸ்டாண்ட்… விஜய் எடுத்த ‘பாமக’ அஸ்திரம்.!

By Nanthini on ஆனி 21, 2026

Spread the love

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணியில் தற்போது உட்கட்சிப் பூசல்களும், புதிய அரசியல் சதுரங்க ஆட்டங்களும் அரங்கேறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, வெறும் 2 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது, ஆரம்பத்திலிருந்தே தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இடதுசாரி கட்சிகளே எந்தவொரு பதவியையும் எதிர்பாராமல் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் மட்டும் அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டு காரியக்காரராகச் செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் தவெகவிற்குள் பலமாக ஒலித்து வருகின்றன.

இதற்கிடையே, தவெக கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே திருமாவளவன் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைப்பது போன்ற இரட்டை நிலைப்பாட்டுடன் பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் விசிக திட்டமிட்டே கால தாமதம் செய்ததும், மற்ற தோழமைக் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்த பிறகும் மௌனம் காத்ததும் முதலமைச்சர் விஜய்யை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் தனியார் ஊடக நேர்காணல் ஒன்றில் பேசிய திருமாவளவன், “நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தவெக கூட்டணியை விட்டு வெளியேறுவோம்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

   

திருமாவளவனின் இந்த தொடர் அரசியல் நகர்வுகளையும், டபுள் ஸ்டாண்ட் விமர்சனங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வந்த முதலமைச்சர் விஜய், விசிகவின் அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அவர்களுக்குச் சரியான ‘செக்’ வைக்கவும் ஒரு அதிரடி திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, தவெக கூட்டணிக்குள் பாட்டாளி மக்கள் கட்சியை (பாமக) உள்ளே இறக்குவதற்கான திரைமறைவு வேலைகள் மிக வேகமாக நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் அரசியல் வட்டாரத் தகவல்களை முன்வைக்கின்றனர். இந்த புதிய கூட்டணி மாற்றம் விசிகவின் பேரம் பேசும் சக்தியைக் குறைக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

   

இதற்குப் பிள்ளையார் சுழி போடும் விதமாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிறைவேற்றிய தீர்மான நகலை முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துக் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையில் மத்திய அரசின் கணக்கெடுப்புக்குப் பின் தமிழக அரசு சமூக நீதி சர்வே நடத்தும் என்ற அறிவிப்பு வெளியானதால் பாமக தரப்பு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இதன் மூலம் ஆளுநர் வழியாகத் தவெக கூட்டணியில் இணைய அன்புமணி காய் நகர்த்தி வருவதாகவும், விஜய்யும் இதற்குச் சாதகமாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளதால் விரைவில் தமிழக அரசியலில் விசிகவுக்குச் செக் வைக்கும் வகையில் ஒரு பெரும் கூட்டணி மாற்றம் நிகழும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.