தமிழக வெற்றிக் கழகத்தின் சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் “ஆணவத்தின் உச்சம்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கடுமையாகச் சாடியுள்ளார். தவெக ஆட்சிக்கு வந்த மறுநிமிடமே திமுக மற்றும் அதிமுக தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியினர் கூறி வருவது அரசியல் அறமற்ற செயல் என்றும், இது வெறும் பிதற்றல் என்றும் அவர் விமர்சித்துள்ளார். தவெக தலைவர்களில் ஒரு சிலர் திமுக மீதுள்ள தனிப்பட்ட பகையைத் தீர்த்துக்கொள்ள விஜய்யைப் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், விசிக-வில் உள்ள 20 பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தவெக-வின் “சிலிப்பர் செல்களாக” (Sleeper Cells) அங்கே ஊடுருவி இருக்கிறார்கள் என்று பரப்பப்படும் தகவலுக்கு சிந்தனை செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு ஜனநாயகக் கட்சியில் இத்தகைய கருத்துக்களைப் பரப்புவது என்ன வகை அரசியல் அறம்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், விசிக தொண்டர்களின் விசுவாசத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக இத்தகைய பேச்சுகள் அமைந்துள்ளதாக ஆவேசம் அடைந்துள்ளார்.
ஆட்சியமைப்பதற்கான ஆதரவு கோரும் சூழலில், விசிக-விற்கும் தவெக-விற்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெக-வின் தர்க்க நியாயம் குறித்து கேள்வி எழுப்பியிருந்த சிந்தனை செல்வன், தற்போது அக்கட்சியினரின் பேச்சுகள் ஆணவத்தின் வெளிப்பாடாக இருப்பதாகக் கூறியிருப்பது, இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. இது திருமாவளவனின் இறுதி முடிவில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
