தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்தேர்தலில் பெற்றுள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக் கொண்டாட்டத்தில் திரைத்துறை மட்டுமின்றி விளையாட்டு உலகைச் சேர்ந்த ஐபிஎல் நட்சத்திரங்களும் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். விஜய்யின் அரசியல் வருகையும் இந்த அதிரடி வெற்றியும் அனைத்துத் தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, விஜய்யின் வெற்றியைச் சிறப்பிக்கும் வகையில் அவருடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ‘அண்ணா’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தான் ஒரு தீவிர விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகன் என்பதை வருண் சக்கரவர்த்தி இதன் மூலம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் ஃபார்ம் இன்றித் தவித்த வருண் சக்கரவர்த்தி, தற்போது அதிரடியாகப் பந்துவீசி விக்கெட்டுகளைக் குவித்து வருகிறார். சமீபத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார். கிரிக்கெட் களத்தில் வருண் சாதித்து வரும் வேளையில், அரசியல் களத்தில் தனது ‘அண்ணா’ விஜய் படைத்துள்ள சாதனையைக் கொண்டாடி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
