வீடு கிரகப்பிரவேசம் என்றாலோ புது தொழில் தொடங்குகிறார்கள் என்றாலோ அங்கு ஹோமம் நடத்தபடுவதை நாம் பார்த்திருப்போம். இது தவிர கோவில்களில் விசேஷ நாட்களில் யாகம் நடத்தப்படுவது வழக்கமானது. நம் பழங்காலம் தொட்டு மன்னர் காலத்தில் இருந்து வந்த ஒரு வழக்கம் யாகங்கள் செய்வது. மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களின் நலனுக்காகவும் தங்கள் ஆட்சியில் செல்வ செழிப்புடனும் தனம் தானியம் குறைவில்லாமல் இருப்பதற்காகவும் மழை வேண்டியும் யாகங்கள் செய்து வந்தனர். தற்போது அவரவர் வசதிக்கேற்ப யாகம் செய்கிறார்கள். ஒரு சிலர் வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் ஹோமம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி யாகம் எனப்படும் ஹோமம் வீட்டில் செய்யும் போது அந்த வீட்டில் இருக்கும் அனைத்து திருஷ்டிகளும், துர்சக்திகளும், எதிர்மறை எண்ணங்களும் வெளியேறி நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து, பிடித்த பீடை கஷ்டங்கள் போன்றவை விலகி நன்மைகள் நடக்க தொடங்கும். சோதனைகளை தாண்டி வெற்றி பெறுவதற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம். ஹோமங்களில் பல வகைகள் இருக்கின்றன. அவை என்னென்ன எந்த நேரத்தில் எந்த ஹோமம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இனி காண்போம்.
1. கணபதி ஹோமம்: முதலில் நமக்கு தெரிந்தது எல்லாரும் பொதுவாக செய்யக்கூடியது கணபதி ஹோமம். எந்த ஒரு ஹோமத்திற்கும் முதல் முதலாக சொல்லப்படுவது கணபதி ஹோமம். காரியத்தடை போன்றவை விலக கணபதி ஹோமம் செய்ய வெற்றி கிடைக்கும். 2. சண்டி ஹோமம்: பயம் தரித்திரம் போன்றவை விலக சண்டி ஹோமம் செய்யப்படுகிறது.
3. நவகிரக ஹோமம்: கணபதி ஹோமத்திற்கு அடுத்ததாக பலர் செய்யக்கூடியது நவக்கிரக ஹோமம். நம் ஜாதகத்தில் பல கிரகங்களின் தோஷம் இருக்கும். அந்த கிரக தோஷங்களை நீக்கி கஷ்ட காலங்களை நீக்கி நவக்கிரகங்களை சாந்திப்படுத்துவதற்காகவும், வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் அடைய நவகிரக ஹோமம் செய்யப்படுகிறது. 4. சுதர்சன ஹோமம்: ஹோமத்திற்கெல்லாம் முதலாவதாக அதிக பலன் தரக்கூடியதாக சொல்லப்படுவது சுதர்சன ஹோமம். பகைவர்களை அழிக்கவும் பில்லி சூனியம் ஏவல் உள்ளிட்ட தீய சக்திகளை அழிக்க நினைப்பவர்கள் சுதர்சன ஹோமம் செய்யலாம்.
5. ருத்ர ஹோமம்: ஆயுள் விருத்தி வேண்டியிருப்பவர்கள் ருத்ர ஹோமம் செய்யலாம். 6. மிருத்யுஞ்ச ஹோமம்: மாந்தி கிரகம் சனிபகவானின் மைந்தன் என கூறப்படுகிறது. அதனால் ஒருவர் ஜாதகத்தில் அது அமைந்திருக்கும் இடமும் பாதகத்தை தர கூடும். இந்த தோஷத்தை நீக்கவும் பிரேத சாபத்தை நீக்கவும் மிருத்யுஞ்ச ஹோமம் செய்யப்படுகிறது.
7. புத்திர காமேஷ்டி ஹோமம்: குழந்தை வரம் கிடைக்காமல் தடைப்படுபவர்கள் நீண்ட நாட்கள் குழந்தை வரம் வேண்டுபவர்கள் புத்திர பாக்கியத்தை பெற புத்திர காமேஷ்டி ஹோமம் செய்வது நல்லது. 8. சுயம்வர கலா பார்வதி ஹோமம்: நீண்ட காலமாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய திருமண தடையை நீக்க விரைவில் திருமணம் கைகூடி மாங்கல்ய வரம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சுயம்வர கலா பார்வதி ஹோமம் செய்ய வேண்டும்.
9. ஸ்ரீ காந்த்ர்வ ராஜா ஹோமம்: நீண்ட காலமாக ஆண்களுக்கு இருக்கும் திருமண தடையை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற ஸ்ரீ காந்தர்வராஜ ஹோமம் செய்வது நல்லது. 10. லட்சுமி குபேரர் ஹோமம்: வறுமை நீங்க செல்வ வளம் அதிகரிக்க பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல செய்யப்பட வேண்டியது லட்சுமி குபேர ஹோமம். 11. தில ஹோமம்: சனி பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் இறந்தவர்களின் சாபத்தால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை நீக்க தில ஹோமம் நடத்தப்படுகிறது.

12.ஸ்ரீ பிரத்தியங்கிரா ஹோமம்: எதிரிகளின் தொல்லைகள் இருந்து விடுதலை பெறவும் உடல் ஆரோக்கியப் பிரச்சினை நோய்களை நீக்கி நலமுடன் வாழ ஸ்ரீ பிரத்தியங்கரா ஹோமம் செய்யப்படுகிறது. 13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம்: தொழில் வியாபாரம் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் சூழ்ச்சிகளை நீக்கி எடுத்த காரியத்தில் வெற்றி மேல் வெற்றி பெற ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் செய்வது நல்லது.
14. கண் திருஷ்டி ஹோமம்: தீயோர் கெட்ட குணம் படைத்தோர் பொறாமை குணம் கொண்டவர் நாம் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்று நினைப்பவர்களின் கண் திருஷ்டியால் குடும்ப அமைதி குலைந்து உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பிரச்சனை மேல் பிரச்சினையை சந்திப்பவர்கள் திருஷ்டியை விலக்க எல்லா பிரச்சினைகளும் தீர கண் திருஷ்டி ஹோமம் செய்வது நல்லது. 15. கால சர்ப்ப ஹோமம்: வாழ்வில் ஏற்படக்கூடிய பல சோதனைகளில் வெற்றி பெறவும் உத்தியோகத்தில் இருக்கும் தடைகள் நீங்க சாதனை செய்ய கால சர்ப்ப ஹோமம் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் அவருக்கு தகுந்தார் போல் ஹோமங்களை செய்யும்போது அதனால் கிடைக்கும் நேர்மறை எண்ணங்களால் நன்மை நடக்கும்.
