திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ராமாயண தோப்பு பகுதியில், கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த ஃபயாஸ் அஹமது என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஃபயாஸ் அஹமது (38), சவுதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த மூன்று மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர், சில நாட்களுக்கு முன்பு வாணியம்பாடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார்.
சம்பவத்தன்று தாய் வீட்டின் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக அவர் நீளமான இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தக் கம்பி வீட்டின் அருகே சென்றுகொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார், ஃபயாஸ் அஹமதின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியவர், திடீர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது.
