மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழைக்கு இடையே, காஞ்சூர்மார்க் ரயில் நிலையம் அருகே வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சீறிப்பாய்ந்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், தண்டவாளத்தில் தேங்கியிருந்த மழைநீரைக் கிழித்துக் கொண்டு செமி-ஹை வந்தே பாரத் சீரான வேகத்தில் முன்னேறிச் செல்வது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரயில் வேகமாகச் சென்றதால் தண்டவாளத்தில் தேங்கியிருந்த நீர் இருபுறமும் பிரம்மாண்டமாக விசிறியடித்துப் பாய்ந்தது. இந்த நீர்ச் சிதறல்கள் ரயில் பாதைக்கு மேலே இருந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீதும் பலமாகத் தெறித்தன. இதனைப் பார்த்த இணையவாசிகள் பலர், இது ஏதோ ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படத்தின் சண்டைக் காட்சி போல மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதாக வர்ணித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DaYgHWASBqQ/?utm_source=ig_web_button_share_sheet
கடுமையான மழை மற்றும் வெள்ளச் சூழலிலும் வந்தே பாரத் ரயிலின் வடிவமைப்பு மற்றும் அதன் பொறியியல் திறனைப் பாராட்டிப் பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், தண்டவாளத்தில் இவ்வளவு அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருப்பது பாதுகாப்பற்றது என்றும், ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் சிலர் தங்களின் கவலைகளையும் இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
