தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சூலூர் பகுதியில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடுமை ஒட்டுமொத்த பொதுமக்களையும் கொந்தளிக்க வைத்தது. அந்தச் சோகம் மறைவதற்குள், தற்போது திருச்சியில் 14 வயது சிறுமி ஒருவருக்கு வாடகை கார் ஓட்டுநர் மது ஊற்றிக்கொடுத்து வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இத்தகைய சூழலில், தமிழக முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியின்போது அறிவித்த ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் குறித்து பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்தடுத்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளைச் சுட்டிக்காட்டி, எத்தனை நாட்களுக்குத்தான் பெண்கள் இவ்வாறு கயவர்களின் பிடியில் சிக்கி சீரழிவது என்று அவர் தனது பதிவில் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் விஜய் அவர்களே, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்குவதற்கு இன்னும் நல்ல நேரம் வரவில்லையா என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களின் பாதுகாப்பிற்கான இத்திட்டத்தை உடனடியாகத் தொடங்கியிருக்க வேண்டும் என்றும், காலம் தாழ்த்தி செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமும் அதற்குரிய பலனைத் தராது என்பதை முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த சிங்கப்பெண் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி பெண்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
