ஜோசப் விஜய் ‘தான் ஒரு கருணாநிதி’ என்பதை நிரூபித்து வருகிறார்… தவெக-வை வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!!

By Soundarya on வைகாசி 31, 2026

Spread the love

சென்னை ஆளுநர் மாளிகையான ‘மக்கள் மாளிகை’யில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் விழாவில், காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மரியாதை செலுத்தினார். இதற்கு திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மதிமுகவின் வைகோ ஆகியோர் வழக்கம் போல் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்து மத வெறுப்பு அனைவரும் அறிந்ததுதான் என்று சுட்டிக்காட்டியுள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) தற்பொழுது திமுகவின் பாதையிலேயே பயணிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியில் நிலவிய சட்டம் ஒழுங்கு சீரழிவுகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தவெக ஆட்சியிலும் தொடர்வதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். முன்பு திமுக அமைச்சர்கள் இந்து மதத்திற்கு எதிராகப் பேசியதைப்போல, தற்போது தவெக அமைச்சர் அருண்ராஜும் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது அவரது தத்துவத்திற்கு எதிரானது என்று பேசியுள்ளார். திருக்குறளில் பிறவி, ஊழ், தவம் போன்ற ஏராளமான இந்து மதக் கோட்பாடுகள் நிறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், காவி உடையுடன் இருந்த திருவள்ளுவரை வெள்ளை உடைக்கு மாற்றியதே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

   

தவெகவினர் தங்களது முதல்வர் ஜோசப் விஜய்யை ‘எம்.ஜி.ஆர்’ என்று கொண்டாடினாலும், அவரோ தன் ஒவ்வொரு செயலிலும் ‘தான் ஒரு கருணாநிதி’ என்பதை நிரூபித்து வருவதாக வானதி சீனிவாசன் சாடியுள்ளார். கடந்த மூன்று வாரங்களாக நடக்கும் சம்பவங்கள், தவெக ஆட்சி என்பது தமிழ்நாட்டின் புதிய தொடக்கமல்ல, அது திமுகவின் தொடர்ச்சிதான் என்பதை உணர்த்துவதாக அவர் கூறியுள்ளார். மேலும், திமுகவின் இந்து மத வெறுப்புக் கொள்கையையே தன் கொள்கையாகக் கொண்டு, அதன் வழியில் பயணிக்கும் தவெகவை தமிழக மக்கள் திமுகவைப் போலவே வீழ்த்துவார்கள் என்றும் தனது அறிக்கையில் அவர் எச்சரித்துள்ளார்.