தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், அண்ணாமலைக்குச் சாதகமான தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இது குறித்துப் பேசிய வானதி சீனிவாசன், கூட்டணி என்று வரும்போது சில விட்டுக்கொடுத்தல்கள் இருக்கும் என்றும், அண்ணாமலை சட்டமன்றத்திற்குச் சென்று மக்கள் பணியாற்றுவதையே தான் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை வானதி சீனிவாசன் கடுமையாகச் சாடியுள்ளார். கமல்ஹாசன் தனது கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, திமுகவுடன் கூட்டணி அமைத்துத் தனக்காக ஒரு மாநிலங்களவை பதவியைப் பெற்றுக்கொண்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் கட்சியை நம்பி வந்தவர்களைக் கைவிட்ட கமல்ஹாசனின் செயல், புதிதாகக் கட்சித் தொடங்குபவர்களை மக்கள் எவ்வாறு எடைபோட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் அவர் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
