கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் வைத்திலிங்கம். இவர் அமைச்சராக இருந்தபோது, தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்குத் திட்ட அனுமதி வழங்குவதற்காக ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், கடந்த 2024 செப்டம்பர் 24 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) இவர் மீது அதிகாரப்பூர்வமாக ஊழல் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தது.
ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், ஓபிஎஸ்-இன் தீவிர ஆதரவாளராகவும் இருந்த வைத்திலிங்கம், இந்த லஞ்ச வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த சூழலில், திடீர் திருப்பமாக கடந்த ஜனவரி 21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் ஆளுங்கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 25 அன்றே அவர் மீதான ரூ.27.9 கோடி லஞ்ச வழக்கை முடித்து வைப்பதற்கான நடவடிக்கைகள் லஞ்ச ஒழிப்புத்துறையால் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆஜராகி, வைத்திலிங்கம் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டதை முறைப்படி உறுதி செய்தது. ஓபிஎஸ் முகாமில் இருந்து விலகி ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்ததற்குப் பிரதிபலனாகவே, அவர் மீதான இத்தனைப் பெரிய ஊழல் வழக்கு அவசர அவசரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அரசியல் வட்டாரங்களில் கடுமையான புகார்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
