“விஜயகாந்தைக் காலி பண்ணதே இவர்தான்.. இப்போ விஜய் கதி?”… ஆர்.பி.உதயகுமார் போட்ட வெடி… தமிழக அரசியலை உலுக்கும் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால் இரு கட்சித் தொண்டர்களிடையே அரசியல் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தவெக தலைவர் விஜய்யையும், அக்கட்சியின் கூட்டணிக் கட்சியான மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவையும் மிகக் கடுமையான தொனியில் விமர்சித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தவெக தலைவர் விஜய்யை ஊழலை ஒழிக்க வந்த அவதார புருஷன் என்றும், மகாத்மா என்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் தேவையின்றி விளம்பரப்படுத்தி வருவதாக ஆர்.பி. உதயகுமார் சாடினார். மேலும், தவெக கூட்டணியில் வைகோ இணைந்துள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், “வைகோ இருக்கும் வரை தவெகவிற்கு வேறு எதிரிகளே தேவையில்லை. பேரறிஞர் அண்ணாவுக்குக் கேடயமாக, கலைஞருக்குக் கவசமாக, ஜெயலலிதாவுக்குப் போர்வாளாக இருந்தேன் என்று கூறும் வைகோ, இப்போது விஜய்யைக் காப்பாற்ற யாரிடம் சத்தியம் செய்துள்ளார்? வைகோவின் கூட்டணி தவெகவிற்கு வினையாக முடியும் என்பதை விஜய் விரைவில் உணர்வார்” என்று எச்சரித்தார்.

   

கடந்த கால அரசியல் வரலாற்றைக் குறிப்பிட்டுப் பேசிய உதயகுமார், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அரசியல் சரிவுக்கு வைகோவே முதன்மைக் காரணம் என்று குற்றம் சாட்டினார். கிட்டத்தட்ட 12 சதவீத வாக்கு வங்கியை வைத்திருந்த விஜயகாந்தை, ‘மூன்றாவது அணியின் முதல்வர் வேட்பாளர்’ என்று ஆசை காட்டி, உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ஊர் ஊராகக் கூட்டிச் சென்று வைகோவும் அவரது கூட்டணியினரும் பிரச்சாரம் செய்ததாகக் குறிப்பிட்டார். “அன்றைக்கு விஜயகாந்தின் அரசியல் கதையை முடித்த வைகோ, இன்றைக்கு விஜய்யையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவரையும் முடிக்காமல் விடமாட்டார்” என்று ஆர்.பி. உதயகுமார் கிண்டலாகவும் ஆவேசமாகவும் தனது உரையை நிறைவு செய்தார்.