மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டுகளாக மதிமுகவை நடத்தி வருகிறேன். முல்லைப் பெரியாறு ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடினேன். புதிதாக கட்சி தொடங்கிய விஜய் பொது பிரச்சனைகளில் தலையிட்டாரா? அல்லது போராட்டங்கள் நடத்தினாரா? தனிப்பட்ட முறையில் விஜயை நான் மதிக்கிறேன். யாரோடு கூட்டு சேர்ந்தாலும் விஜய் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆகும் ஆசை கனவு எனக்கு கிடையாது. நான் எப்போதும் முதல்வர் ஆவேன் என்று பேசியது இல்லை. திமுக தவெக இடையே தான் போட்டி என சினிமாவில் பேசும் வசனங்களைப் போல மேடைகளில் விஜய் பேசி வருகிறார். விஜய்யின் கனவு ஒருபோதும் நனவாகாது. காகிதக் கப்பலில் கரையை கடக்க முயற்சிக்கிறார் விஜய். அது ஒருபோதும் கரை சேராது. ஆகாய வெளியில் மனக்கோட்டை கட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும். அவர் காணும் கனவு ஒரு நாளும் பலிக்காது என்று மதிமுக செயலாளர் வைகோ விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
