மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மற்றும் கூட்டணி நிலவரங்கள் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
தற்போதைய தமிழக அரசைப் பாராட்டிய வைகோ, முந்தைய ஆட்சிகளைப் போல ஸ்டெர்லைட் போன்ற பெரு நிறுவனங்களால் தற்போதைய முதலமைச்சர் விஜய்யை எளிதில் அணுக முடியவில்லை என்றும், லஞ்ச லாவண்யங்கள் இல்லாத நேர்மையான ஆட்சி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் குறித்துப் பேசுகையில், முந்தைய ஆட்சிக் காலங்களுடன் ஒப்பிடும்போது தற்போதைய அரசு திறம்படச் செயல்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் திமுக மீது வைகோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாக்குச்சாவடி வாரியாக மக்களை நீக்கும் பணியில் திமுகவினர்தான் ஈடுபட்டனர் என்று குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்திற்குக் முழுக்க முழுக்க திமுகவே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த வைகோ, மத்திய அரசின் எடுபிடியாகச் செயல்பட்டு அவர் தேர்தல் குளறுபடிகளுக்கு வழிவகுத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், ஞானேஷ் குமார் தனது பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் அல்லது அவரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
SIR (வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்) நடவடிக்கை குறித்துப் பேசுகையில், இந்த விவகாரம் இல்லாவிட்டால் நடிகர் விஜய் இன்னும் 30 இடங்களைப் கூடுதலாகப் பெற்றிருப்பார் என்று வைகோ தெரிவித்தார். SIR காரணமாகத்தான் விஜய் ஆட்சிக்கு வந்ததாகச் சிலர் கூறுவதை மறுத்த அவர், மாறாக SIR நடவடிக்கைகளினால்தான் விஜய் கூடுதல் இடங்களைப் பெறுவது தடுக்கப்பட்டது என்றும், அதற்குத் திமுகதான் காரணம் என்றும் கூறினார்.
இறுதியாக, தவெக அரசுடன் தங்களது கூட்டணி சுமுகமாகச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த வைகோ, திமுகவை மக்கள் முழுமையாகத் தூக்கி எறிந்துவிட்டதால்தான் விஜய் இன்று முதலமைச்சராகியுள்ளதாகத் தெரிவித்தார். கூட்டணிக்குள் முரண்பாடுகள் வந்தால் அதனை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுவதாகவும், மக்கள் ஆதரவுடன் நேர்மையான ஆட்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தனது பேட்டியில் நிறைவு செய்தார்.
