“வீட்டில் செய்வினை இருக்கு, ரத்தம் கக்கி செத்துடுவீங்க”… மாலை 6 மணிக்கு மேல பாருங்க… வடிவேலு பட பாணியில் நிஜத்தில் நடந்த பகீர் மோசடி…!

By Nanthini on மாசி 3, 2026

Spread the love

புதுச்சேரியில் வடிவேலு பட பாணியில் மூதாட்டி ஒருவரை ஏமாற்றி நகை மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற நூதன மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 59 வயதான கோமளவள்ளி என்ற பெண்ணின் வீட்டுக்கு வந்த இரு நபர்கள், தாங்கள் ஜோதிடர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். அவரது வீட்டில் கடும் செய்வினை இருப்பதாகவும், அதனைச் சரி செய்யாவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் ரத்தம் கக்கி உயிரிழப்பார்கள் என்றும் கூறி அவரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்த வார்த்தைகளை உண்மை என்று நம்பிய கோமளவள்ளி, அவர்கள் கூறிய பரிகார பூஜைக்குச் சம்மதித்துள்ளார். பூஜையின் ஒரு பகுதியாகத் தங்க நகைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நபர்கள் கூறவே, அவர் தனது 5 கிராம் தங்க நகைகளையும், பரிகாரச் செலவுக்காக சுமார் 18,600 ரூபாய் பணத்தையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மஞ்சள் கலந்த நீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் நகைகளைப் போட்டு அவர்கள் பூஜை செய்வது போல நடித்துள்ளனர்.

   

பூஜை முடிந்ததும், “மாலை 6 மணிக்கு மேல் தான் இந்தப் பாத்திரத்தைத் திறந்து நகைகளை எடுக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்துவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு மாலை நேரத்தில் பாத்திரத்தைத் திறந்து பார்த்த கோமளவள்ளி, உள்ளே நகைகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். திரைப்படங்களில் நடிகர் வடிவேலு ஏமாறுவது போன்றே, கைகவரிசை காட்டி நகைகளைத் திருடிச் சென்றதை உணர்ந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

   

புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், புதுச்சேரி ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த திருநெல்வேலியைச் சேர்ந்த சின்னராசு மற்றும் ராக்கெட் ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோமளவள்ளியை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மற்றும் பணம் மீட்கப்பட்ட நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோன்ற போலி ஜோதிடர்களின் பேச்சை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.