கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கண்ணுதோப்பு பாலம் பகுதியில், சாலையோர மண் குவியலில் பெண் ஒருவரின் சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக புதைக்கப்பட்டு மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சடலமாக மீட்கப்பட்டவர் வடலூர் சர்வோதயா நகரைச் சேர்ந்த மஞ்சுளா (35) என்பது அவரது கையில் இருந்த டாட்டூ மற்றும் கொலுசு மூலம் உறுதி செய்யப்பட்டது. சென்னையில் உள்ள தனது மகளைப் பார்த்துவிட்டு ஊர் திரும்பிய மஞ்சுளா, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது குறித்து வடலூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
மஞ்சுளாவின் செல்போன் அழைப்பு விவரங்களை (CDR) ஆய்வு செய்த தனிப்படை போலீசார், சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரியான சம்பத் (39) என்பவருடன் அவர் தினமும் நீண்ட நேரம் பேசி வந்ததை உளவுத்துறை பாணியில் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சம்பத்தைப் பிடிக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், நெய்வேலி ஆர்ச் கேட் அருகே அவர் மீன் வறுவல் வியாபாரம் செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் கஸ்டமர்களைப் போல மாறுவேடத்தில் அந்த இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு சென்ற தனிப்படை துணைக் கண்காணிப்பாளர், ஒரு வாடிக்கையாளரைப் போல நடித்து சம்பத்திடம் மீன் வறுவல் கேட்டுள்ளார். தன்னைத் தேடி வந்தது போலீஸ் என்று சற்றும் ஊகிக்காத சம்பத், முகத்தில் எந்தவித பதற்றமும் இல்லாமல், இன்முகத்தோடு சிரித்தபடியே போலீசாருக்கே மீன் வறுவல் போட்டுத் கொடுத்துள்ளார். மீன் வறுவலை வாங்கிக்கொண்டே அவரிடம் சாதாரணமாகப் பேச்சுக்கொடுத்த போலீசார், சாதுரியமாக அவரைத் தங்களது வாகனத்தில் ஏற்றி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
கொலைக்கான பின்னணி: தொடக்கத்தில் தனக்கு எதுவுமே தெரியாது என மறுத்த சம்பத், மஞ்சுளாவுடன் தினமும் பேசியதற்கான ஆதாரங்களை போலீசார் காட்டியதும் திணறத் தொடங்கினார். இறுதியில், மஞ்சுளாவுடன் தனக்கு கள்ளக்காதல் இருந்ததையும், அவர் தன்னைத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, உடலை மண் குவியலில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார். தன்னைத் தேடி வந்த தனிப்படை போலீசாருக்கே கொலையாளி மீன் வறுவல் விற்ற இந்த சினிமா பாணி சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
