தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.
திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார்.
அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். வாலியைப் பொறுத்தவரை திரையுலகில் அனைவருமே அவருக்கு நண்பர்கள்தான். சக பாடல் ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவருமே அவரிடம் அன்பாகப் பழகுவார்கள்.
அதே போல சினிமா பாடல் ஆசிரியர்களிலேயே மிகவும் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவர் என்றால் அது வாலிதான். இது சம்மந்தமாக பாடல் ஆசிரியர் டி எல் மகாராஜன் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஒரு பாடல் ரஹ்மான் இசையில் பாட சென்றேன். அப்போது ஒரு வரி மட்டும் தாளத்தில் உட்காரவில்லை. அதை மாற்றிக் கொள்ளலாம் என ரஹ்மான் சொன்னார்.
அப்போது நான் அவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம் என்றேன். அது நள்ளிரவு நேரம். இருந்தாலும் போன் செய்தோம். அவரே எடுத்தார். அவரிடம் வார்த்தையை மாற்றிக் கொள்ளலாமா எனக் கேட்டபோது ‘நான் என்ன திருக்குறளா எழுதியிருக்கேன். மாத்த முடியாதுன்னு சொல்ல.. எத வேணாலும் மாத்திக்க” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.