’வாய்ப்புத் தேடுவதிலேயே வித்தியாசம் காட்டணும்… அப்பதான் நாம ஒரு ஆளாக முடியும்’- வித்தியாசமாக முயன்ற வாலிபக் கவிஞர் வாலி!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

ஆனால் எந்தகாலத்திலும் அவர் நம்பர் 1 கவிஞராக இருந்தார். எப்போதும் இரண்டாவது இடத்திலேயே இருந்தார். ஆனால் 60 ஆண்டுகளில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை உருவானதே இல்லை. அந்த அளவுக்கு இறக்கும் வரையிலும் பிஸியாக இருந்தார்.

   

வாலி அவர்களுக்கு எதையுமே கொஞ்சம் வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் உண்டு. தன் பாடல் வரிகளிலேயே பல இடங்களில் தன்னுடையத் தனித்துவத்தைக் காட்டுவார். இந்தப் பழக்கம் அவர் வாய்ப்புகளைத் தேடும் காலத்திலேயே அவருக்கு இருந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் அவரின் இந்த பழக்கம்தான் அவருக்கு சினிமாவின் கதவை திறந்துவிட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் இருந்தபடியே சினிமாவில் பாடல் எழுதும் ஆர்வத்தோடு இயங்கி வந்துள்ளார் வாலி. அப்போது பாடல் வாய்ப்புகள் பெற என்ன செய்யலாம் என யோசித்த போது எல்லோர் போலவும் ஒவ்வொருவராக தேடிச் சென்று வாய்ப்புத் தேடவேண்டாம். நாம் எழுதிய ஒரு பாடலை போஸ்ட் கார்டில் எழுதி சிலருக்கு அனுப்புவோம். அவர்களுக்கு நம் வரிகள் பிடித்திருந்தால் அவர்கள் அழைக்கட்டும் எனநினைத்து அந்த திட்டத்தை செயல்படுத்தியும் உள்ளார்.

அப்படி அவர் “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை உனைமறவேன்” என்ற பாடல் வரிகளை எழுதி பலருக்கு அனுப்பியுள்ளார். அப்படி அனுப்பியவர்களில் ஒருவர்தான் பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ். அவருக்கு அந்த வரிகள் பிடித்துவிட “நீங்கள் சினிமாவில் பாடல் எழுத சரியான ஆள். கிளம்பி சென்னைக்கு வாருங்கள்” எனக் கூறியுள்ளார். அதன் பிறகுதான் அவர் சென்னை வந்து சினிமா வாய்ப்புகளைத் தேட தொடங்கியுள்ளார்.