அமெரிக்காவைச் சேர்ந்த சார்லி எவான்ஸ் என்ற யூடியூபர், கடந்த 148 நாட்களாக இந்தியாவில் பயணம் செய்து வருகிறார். தனது பயண அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் அவர், சமீபத்தில் இந்திய சுகாதார கட்டமைப்பு குறித்து வெளியிட்ட கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவின் மருத்துவச் சூழல் மிகவும் சிறப்பானது என்று அவர் வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் தனது பயணத்தைத் தொடங்கிய எவான்ஸுக்கு, சில வாரங்களுக்குப் பிறகு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மருத்துவரைப் பார்ப்பதற்கும், சிகிச்சை பெறுவதற்கும் பல நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நீண்ட கால காத்திருப்பு தேவைப்படும் நிலையில், இந்தியாவில் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களை அணுகுவது மிகவும் எளிமையானது என்பதை அவர் வியப்புடன் குறிப்பிடுகிறார். எவ்வித சிரமமுமின்றி உடனடி சிகிச்சை பெறுவது இந்தியாவில்தான் சாத்தியம் என அவர் உணர்ந்துள்ளார்.
மேலும், இந்திய மருத்துவக் கடைகளில் கிடைக்கும் மருந்துகள் மிகவும் பயனுள்ளவையாகவும், அமெரிக்காவைக் காட்டிலும் சிறந்த பலனைத் தருவதாகவும் அவர் கூறுகிறார். மருந்துகள் மட்டுமின்றி, இந்திய வீடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இயற்கை மற்றும் ஆயுர்வேத மூலிகை மருத்துவ முறைகளும் நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதை அவர் கண்டு வியந்துள்ளார். அவசர தேவைக்குக் கூட அண்டை வீட்டாரோ அல்லது நண்பர்களோ உதவும் வகையில் இந்தியர்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அக்கறையும் இருப்பதை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்தியா குறித்துத் தவறான கருத்துகளைப் பரப்புபவர்கள் மத்தியில், சார்லி எவான்ஸின் இந்த நேர்மையான பார்வை பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு வெளிநாட்டவர் இந்திய சுகாதார முறையை இவ்வளவு உயர்வாக மதிப்பிட்டிருப்பது, இந்திய மருத்துவத் துறையின் சிறப்பம்சங்களை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. இவருடைய இந்த வீடியோவைப் பார்த்துப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து, இவரைப் பாராட்டி வருகின்றனர்.
