ஈரான் நாட்டின் ராணுவத் திறனை முடக்குவதில் அமெரிக்கா பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், இன்று நடைபெறவுள்ள தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்சேத் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் தற்போது 11-வது நாளை எட்டியுள்ளது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால், வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய பீட் ஹெக்சேத், இன்றைய தினம் ஈரான் சந்திக்கப்போகும் நாள் மிகவும் மோசமான ஒன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிகப்படியான போர் விமானங்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களைக் கொண்டு துல்லியமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்ணயித்த இலக்குகளை அமெரிக்கப் படைகள் அடைந்து வருவதாகவும், ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் ஏவிய ஏவுகணைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமெரிக்கா, இதுவே தங்கள் தாக்குதலுக்குக் கிடைத்த வெற்றிக்குச் சான்று எனக் கூறியுள்ளது. ஈரானின் பதிலடி கொடுக்கும் திறன் பலவீனமடைந்து வருவதாகவும், ராணுவ ரீதியாக அமெரிக்கா இந்த மோதலில் மேலோங்கி இருப்பதாகவும் வாஷிங்டன் தரப்பு வாதிடுகிறது. எனினும், இரு நாடுகளும் மாறி மாறி எச்சரிக்கைகளை விடுத்து வருவதால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கவலை சர்வதேச சமூகத்திடையே எழுந்துள்ளது.
தொடர்ந்து நீடித்து வரும் இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் இந்தத் தீவிரமான நிலைப்பாடு வளைகுடா நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரு முழு அளவிலான உலகப் போருக்கு இது வழிவகுக்குமோ என்ற அச்சத்தையும் விதைத்துள்ளது.
