மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றமான சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை “ட்ரம்ப் ஜலசந்தி” (Strait of Trump) என மாற்றி அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தொடுத்த தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இப்பாதை முடக்கப்பட்டதால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியது.
ஈரான் தனது நட்பு நாடுகளின் கப்பல்களை மட்டும் அனுமதித்து, மற்ற கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்த நிலையில், நேட்டோ நாடுகளின் உதவியை நாடினார் ட்ரம்ப். இருப்பினும், போரைத் தவிர்க்க விரும்பிய நேட்டோ நாடுகள் உதவி செய்ய மறுத்ததால், ஹார்முஸ் விவகாரத்தில் அமெரிக்கா தனித்து விடப்பட்டது. ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகளும், அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட காலக்கெடுவும் இப்பகுதியை உலக நாடுகளின் உற்றுநோக்கலுக்கு உள்ளாக்கியது. பல நாடுகளின் மத்தியஸ்தத்தினால் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம், இஸ்ரேலின் லெபனான் தாக்குதலால் முறிந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்பட்டது.
ஈரானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக முற்றுகையிட்டுள்ளது. ஈரானுக்கு உள்ளே வரும் மற்றும் வெளியே செல்லும் அனைத்துக் கப்பல்களையும் தடுத்து நிறுத்தும் இந்த முற்றுகை, தற்போதைய சூழலில் ஈரானுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ஜலசந்தியைத் திறந்தாலும், அமெரிக்காவின் இந்த முற்றுகையினால் அங்கு கப்பல் போக்குவரத்து சீராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அதிகாரப் போட்டியின் உச்சகட்டமாக, அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருத்தப்பட்ட புதிய வரைபடம் ஒன்றை நேற்று பகிர்ந்துள்ளார். அதில், காலம் காலமாக ‘ஹார்முஸ் ஜலசந்தி’ என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு, தனது பெயரைச் சூட்டி ‘ட்ரம்ப் ஜலசந்தி’ என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இப்பகுதி வந்துவிட்டதை உலகிற்குப் பறைசாற்றும் நோக்கில் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றம், மத்திய கிழக்கில் புதிய புவிசார் அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
