மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே இரண்டு போர் விமானங்கள் தாங்கி கப்பல்கள் அங்குள்ள நிலையில், தற்போது ‘யு.எஸ்.எஸ். ஜார்ஜ் எச்.டபுள்யூ. புஷ்’ உள்ளிட்ட கூடுதல் கப்பல்கள் மற்றும் நவீன நாசகாரப் படைகள் ஈரானை நோக்கி அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 15,000 தரைப்படை மற்றும் வான்வழி வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்த நகர்வானது, 2003 ஈராக் போருக்குப் பிறகு அமெரிக்கா மேற்கொள்ளும் மிகப்பெரிய ராணுவக் குவிப்பாகக் கருதப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஈரானுக்கு வெறும் 3 முதல் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியமான வணிகப் பாதைகளில் ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதேசமயம், ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது ஈரானியப் படைகள் நடத்திய தாக்குதலால் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் ஈரானின் முடிவு திருப்திகரமாக இல்லையெனில், ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
